“அழுதேன்!”
அன்பு ஒளி
Reaching out people

ஒரு அரசாங்க பள்ளியில் எனது மகளையும் மகனையும் ஆறாவது வகுப்பிலும், ஐந்தாவது வகுப்பிலும் சேர்ப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அந்தப் பள்ளி வளாகத்தில் அதிக கூட்டம். சுமார் 3000 ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் படிக்கும் பள்ளி அது.
    
நான் ஒரு அரசாங்க எஞ்சினியராக இருந்த கால கட்டத்தில் என்னிடத்தில் அதிக பணப் பழக்கம் இருந்தது. என் மனைவியும் ஓர் இஞ்சினியர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல என்னுடைய மிஷனரி அழைப்பை தேவன் உறுதி படுத்திக்கொண்டே வந்தார். எனக்கு நல்ல சம்பளம், என் மனைவிக்கும் நல்ல சம்பளம். ‘இந்த நல்ல சம்பளத்தை விட்டுவிட்டு, எப்படி ஓர் மிஷனரியாக கடந்துபோக முடியும்?’ என்ற எண்ணத்தில் அதை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், தேவனுடைய திட்டம் நிறைவேற்றப்பட அவர் அந்த அழைப்பை உறுதிப்படுத்தினார்; வேலையை விட்டோம். பாம்பே பட்டணத்தில் புறநகர்ப் பகுதியில் Slum ஊழியத்திற்கு எங்கள் சபையிலிருந்து எங்களை அனுப்பி வைத்தனர். மொத்தம் 3 பிள்ளைகள், சின்ன வயது. ஆனால் தேவன் எங்களுக்குக் கொடுத்த விசுவாசமோ பெரியது. இவைகளை மூலதனமாக்கி அந்த Slum ஊழியத்தைத் தொடங்கினோம்.
   
எங்கள் வீடு இரண்டு சின்ன அறை உள்ள வீடு. அட்வான்ஸ் ¼ லட்சம். வாடகை ரூபாய் 300/- எங்கள் சபையே கொடுத்துவிட்டது. வீடு சின்னதே தவிர மற்ற எல்லா வசதிகளும் இருந்தது. எங்கள் வீட்டின் அருகில மராட்டி மொழியில் நடக்கும் ஓர் மேல்நிலைப்பள்ளியும் ஜீனியர் காலேஜீம் இருந்தன. அந்த பள்ளியில் எங்கள் முதல் இரண்டு பிள்ளைகளையும் சேர்ப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். எண்ணிப்பார்த்தேன்.. ஒரு வேளை நானும் என் மனைவியும் தமிழ்நாட்டிலேயே எஞசினியராக இருந்திருந்தால் என் பிள்ளைகளை பணக்காரர்கள் படிக்க வைக்கும் ஆங்கில மொழி கற்றுக் கொடுக்கும் உயர்ந்த பள்ளியில் சேர்ந்திருப்போமே.

ஆனால், தேவ அழைப்பிற்கு இணங்கி, சொந்த ஊரை விட்டு, பாம்பே பட்;டணம் வந்ததை நினைக்கும்போது ஒரு பக்கத்தில் மனதில் துக்கம்.. ஆனால் தேவன் பெரியவர்.. நல்லவர்.. பலனளிக்கிறார்.. வழி நடத்துகிறவர்.. மேலான திட்டங்களை நிறைவேற்றுகிறவர் என்ற எண்ணமும், சில வாக்குத்தத்த வசனங்களும் உடனே ஞாபகத்தில் வந்தது. எனவே இந்த துக்கம் என்னை மேற்கொள்ளவில்லை. பிள்ளைகளும் என்னோடு நின்று கொண்டிருந்தார்கள். தலைமை ஆசிரியர் அருகில் வந்தபோது அவர் மராட்டியிலேயே என் பிள்ளைகளிடத்தில் பேச ஆரம்பித்தார். அவர்களுக்கு ஒரளவு இந்தியும், மராட்டியும் தெரியும். அவர் இந்தியில் கேட்டுவிட்டு மராட்டியிலும் கேட்டார். 

பிள்ளைகள் ஓரளவிற்குப் பதில் சொன்னார்கள். “O.K.” என்று சொன்னார். பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டார்கள். அடுத்த கவுண்டரில் “எவ்வளவு பீஸ்?” என்று கேட்டபோது, “முழு ஆண்டிற்கும் இரண்டு பிள்ளைகளுக்கு சேர்த்து, மொத்தத்தில் ரூபாய் 28/- மட்டுமே. அதற்குமேல் இந்த ஆண்டிற்கு பீஸ் கட்டத் தேவை இல்லை, இது அரசாங்கப் பள்ளி..”
     
இந்த பள்ளிக்கூடத்தில் என் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு அங்குள்ள கட்டடங்களை எட்டிப்பார்த்தேன். அதிகம் வசதியில்லாத சூழ்நிலை.. சாதாரண இருக்கை.. அங்கு காணப்படும் பிள்ளைகளும் சாதாரண குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகள்.. இவைகள் என்னை மறுபடியும் மறுபடியும் துக்கப்பட வைத்தது. “நாங்கள் மிஷனரிகள். எனவே என் பிள்ளைகளை சாதாரண பள்ளியில் படிக்க வைக்கிறோம். மொத்தத்திலேயே பீஸ் ரூபாய் 28/- மட்டுமே. என் அழைப்பினால் அல்லவா என் பிள்ளைகளை சாதாரண பள்ளியில் சேர்த்திருக்கிறேன்” என்று எண்ணினபோது என் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் என் கன்னத்தில் விழுந்ததைக் கண்டேன். யாரும் பார்த்துவிடாதபடி துடைத்தேன். வீட்டிற்குத் திரும்பினேன்.
   
என் வீட்டில், என் மனைவி எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் நுழைந்த உடன் நான் தேம்பித் தேம்பி அழுதேன். என் மனைவியும் ஒன்றும் அறியாமல் அழுதுவிட்டார்கள். பிள்ளைகளைச் சேர்த்ததையும், ஓர் ஆண்டுக்கு 14 ரூபாய் கட்டணம் என்பதையும் சொன்னதோடு அவர்களது எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டேன். இரண்டு பேருமே சுமார் 15 நிமிடங்கள் தேம்பித் தேம்பி அழுது ஜெபித்தோம்.
       
காலங்கள் வேகமாக சென்றன. தேவன் அந்த ஆண்டில் ஓர் வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்” (ஏசாயா 8:18)
     
இந்த வசனம் அடிக்கடி என்களுடைய பிள்ளைகளைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என் மனதையும் என் மனைவியும் சந்தோஷப்படுத்தியது. அன்றுமுதல் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்து நாங்கள் துக்கப்பட்டதேயில்லை. 12ம் வகுப்பில் என் மகள்தான் அந்தப்பள்ளியில் முதல் மாணவி. என் மகனும் சுமாராகப் படித்துத் தேறினான். அரசாங்கப் பள்ளியில் படித்த எனது 2 பிள்ளைகளுக்கும் இன்று திருமணமாகிவிட்டது. இரண்டுபேருக்கும் வெளிநாட்டில் வேலை.. அதிக சம்பளம்.. கடைசி மகனும் வெளி தேசத்தில் சிறப்பான பயிற்சி பெற்று வருகிறான். இப்போது சொல்லுங்கள். தேவன் தந்த வாக்குத்தத்த வசனம் அடையாளங்களாய், அற்புதங்களாய் நிறைவேறிற்றா இல்லையா?
   
பிள்ளைகள் படிப்பைக்குறித்து துக்கமாயிருக்கும் தகப்பனாரே! தாயே! தேவன் உங்கள் பிள்ளைகளை உயர்த்துவார்.. கனம் பண்ணுவார்.. அற்புதங்களாய் இருப்பார்கள். அடையாளங்களும் அவர்களே. இன்றே உங்கள் பிள்ளைகளை தேவனுடைய ஆளுகைக்கும் மேலே உள்ள வசனத்திற்கும் அர்ப்பணியுங்கள். தேவன் எதிர்பார்க்கும் சிறிய காரியமோ பெரிய காரியமோ அதை கண்டுபிடித்து கீழ்ப்படிந்து பாருங்கள். தேவன் நிச்சயம் அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார். அல்லேலூயா!

“உனக்கு சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாயிருக்கும்” - லூக்கா 1:14

Engineer சுவி. பரேலி, மகாராஷ்டிரா


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'