ஜெபமும் முயற்சியும்
சகோ. சாம்சன் பால்
Family Pages Article Image

 
யாத். 17: 8-16
எபே. -6: 10-24

மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில்....யாத் -17 : 11

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பது உண்மைதான். எந்த ஒரு வெற்றிக்கும் முயற்சி மிக இன்றியமையாதது. அதே வேளையில் சுய முயற்சிகளை மட்டும் சார்ந்து வாழ்வில் வெற்றிகளுக்கு உத்திரவாதம் இல்லை. ஜெபமே ஜெயம் என்பது உண்மையான கூற்றுத்தான். ஜெபத்தினால் பெரிய வெற்றிகளைக் காணமுடியும். ஆயினும் ஜெபம் மட்டுமே வெற்றிகளை வீடு தேடிக் கொண்டு வந்து விடாது. ஜெபத்தோடு கூடிய முயற்சியும், முயற்சியோடு கூடிய ஜெபமும்தான் வெற்றியைக் கொண்டு வரும்.

ரெவிதீம் என்ற இடத்தில் இஸ்ரவேலருக்கும், அமலேக்கியருக்கும் இடையே நடந்த யுத்தத்தை குறித்து யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். அங்கே சிறந்த யுத்த வீரனாகிய யோசுவாயின் தலைமையில் ஒரு படை அமலேக்கியரோடு யுத்தம் செய்தது. மறுபுறம் மோசே ஒரு மலையின் மேல் நின்றுகொண்டு நாள் முழுதும் பரலோகத்தை நோக்கித் தன்கையினை நீட்டிய வண்ணம் நின்றிருந்தான்.

யோசுவாவின் சரீரப்பிரகாரமான முயற்சிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. மோசேயின் செயல் ஆவிக்குரிய பிரகாரமான முயற்சிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. இரண்டும் இணைந்தபோதுதான் அமலேக்கியர்களை மேற்கொள்ள முடிந்தது. ஆம். ஒருபுறம் தேவன் நமக்கு இயற்கையாகத் தந்துள்ள ஆற்றல்கள், திறமைகள், அறிவுப்பூர்வமான அணுகுமுறைகள் ஆகியவற்றைக் கொண்டு நாம் தீவிரமான முயற்சிகளில் ஈடுபடவேண்டியது அவசியம். அதே வேளையில் நம்முடைய திறமைகள், முயற்சிகள், ஆற்றல்கள், அறிவு ஆகியவற்றால் திருப்தி, சமாதானம், மனமகிழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வெற்றிகளை நாம் பெற வேண்டுமானால், தேவ கிருபையையும், இரக்கங்களையும் தேடிச் செயல்படுகிற ஆவிக்குரிய முயற்சிகள் மிகவும் அவசியம்.

சிலர் தங்கள் திறமையாலும், அறிவுக்கூர்மையாலும் எல்லாவற்றையும் சாதித்திட முடியும் என்ற உணர்வோடு செயல்கடுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வெற்றிகள் வந்தாலும் அவைகள் அவர்களுக்கு சமாதான முடிவுகளைத் தருவதில்லை. மறுபுறத்தில் அநேகர் தாங்கள்  ஜெபித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும், எல்லாம் தானாக நடந்துவிடும் என்று செயல்படாமல் இருந்து வருவார்கள். இதுவும் தவறானதே. ஜெபத்தின் மூலம் தேவ கிருபையைத் தேடுகின்ற நாம், செயல்படுகிறவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் வெறும் ஜெபத்தின் மூலமாக மட்டுமே செயல்படுவதில்லை. நம்முடைய முயற்சிகளும் அங்கே தேவை. அவைகள் மூலம் தான் தேவன் தம் வல்லமையை வெளிப்படுத்டதுவார்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.